இஸ்ரேல் பிணைக் கைதிகளைப் பிணமாகப் பார்ப்பீர்கள்! ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேலிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்களை பிணைக்கைதிகளாகப் பார்க்க வேண்டிய அபாய நிலை உருவாகக்கூடும் என்று இஸ்ரேல் அரசுக்கு பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கவனத்துக்குச் செல்லும் வகையில், ஹமாஸ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள காணொலியில், இஸ்ரேலிய பிணைக் கைதிகளாக சிக்கியிருக்கும் எல்கானா போஹ்போட் மற்றும் யோசேஃப்-ஹைம் ஒஹானா ஆகிய இருவரையும் சித்ரவதைச் செய்ய முற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.
சமூக வலைதளமான டெலிகிராமில் ஹமாஸ் பயன்படுத்தும் பக்கத்தில் இந்த காணொலி பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘நேரம் விரைவாகக் கடந்து கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கின்றது ஹாமாஸ் தரப்பு.
அத்துடன், ‘போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை மட்டுமே உங்கள் நாட்டு மக்களை மீண்டும் தாயகம் அழைத்து வர வழிவகைச் செய்யும்’ என்று குறிப்பிட்டு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட இஸ்ரேலை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.