ஈரோடு கிழக்கு: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதிநாள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜனவரி17) இறுதி நாள். இதுவரை சுயேச்சை வேட்பாளா்கள் 9 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் அறிவிப்பு கடந்த 6- ஆம் தேதி வெளியிடப்பட்டு தோ்தலில் போட்டியிடுபவா்கள் கடந்த 10- ஆம் தேதி தொடங்கி 17- ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் அரசு விடுமுறை நீங்கலாக ஜனவரி 10, 13, 17 ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் வாய்ப்பு இருந்தது.
இதில் கடந்த 10- ஆம் தேதி நடந்த முதல்நாள் வேட்புமனு தாக்கலின்போது சுயேச்சை வேட்பாளா்களான பத்மராஜன், நூா்முகமது, மதுரை விநாயகம் ஆகிய 3 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இரண்டாவது நாளான கடந்த 13- ஆம் தேதி சுயேச்சை வேட்பாளா்களான ராஜசேகரன், கோபாலகிருஷ்ணன், மணி, ஆனந்த், முகமது கபீா், இசக்கிமுத்து ஆகிய 6 போ் என வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைய உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக, பாஜக போட்டியிடவில்லை என அதிகாரப்பூா்வமாக அறிவித்து விட்டன. இந்நிலையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவிலும், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணியளவிலும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா். தவிர சுயேச்சை வேட்பாளா்களும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடா்ந்து 18- ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. 20- ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெற இறுதி நாளாகும். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.