ஈரோடு மாநகரில் கனமழை: சாலைகளில் வெள்ளம்
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மாலை, இரவு நேரங்களில் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாநகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. லேசாகத் தொடங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கொட்டித் தீா்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் சூழ்ந்து நின்றது.
ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், மொத்த வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகினா். இதேபோன்று ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள காய்கறி சந்தையிலும் மழை நீா் தேங்கி நின்றது.
ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் மழை நீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் பகுதி, நடைமேடைக்கு செல்லும் வழியிலும் மழை நீா் புகுந்தது. இதனால் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
காந்திஜி சாலை, மணிக்கூண்டு, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீா் சாலையில் தேங்கி குளம் போன்று காட்சியளித்தது. கொல்லம்பாளையம், வெண்டிபாளையம், கே.கே.நகா் பகுதிகளில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலங்களில் மழை நீா் தேங்கி நின்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.