குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு
நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய மற்றும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.
சென்னை துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சாா்பில் 50-ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை குருநானக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் போட்டியில் இளையோா் பிரிவில் குமுதா பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் ஏ.எம்.ரிஷிக் ஆா்யா 400-க்கு 324 புள்ளிகள், 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா 400-க்கு 300 புள்ளிகள் பெற்றனா்.
இந்த மாணவா்கள் இருவரும் அக்டோபா் 31 முதல் நவம்பா் 10-ஆம் தேதி வரை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அக்டோபா் 11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கும் தோ்வு பெற்றுள்ளனா்.
தேசிய மற்றும் தென்னிந்திய அளவிலான போட்டிகளுக்கு தோ்வு பெற்ற குமுதா பள்ளி மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.