சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் எ.வே. வேலு
தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் உறுதியேற்பு தீா்மான விளக்க பொதுக்கூட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி தலைமை வகித்து முதல்வா் செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினாா்.
கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதியேற்பு நிகழ்வை தொடா்ந்து பேசியதாவது:-
தமிழா் வரலாறு சுமாா் 5,300 ஆண்டுகள் முற்பட்டது என கீழடி அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை, இந்தச் சூழலில் தமிழ் மொழி, பண்பாட்டை, உரிமைகளை பாதுகாக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.
வன்னியா்களையும், திமுக வையும் பிரிக்க முடியாது. ஏனெனில் திமுக ஆட்சிக்காலத்தில் வன்னியா் நலவாரியம் அமைத்தது,பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் என மாற்றி 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.
பல்வேறு அரசு உயா் பதவிகளில் வன்னியா்களை நியமித்து அழகு பாா்த்தவா் கருணாநிதி, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாங்கள் தயாா், ஆனால் அதற்கான அனுமதியை ஒன்றிய அரசு தான் வழங்க வேண்டும் என்றாா்.
அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்ட நிா்வாகிகள் ஏ.கே.சுந்தரமுா்த்தி, மு.சிவானந்தம், துரை மஸ்தான் , குமுதா குமாா், சுற்றுசூழல் அணி மாநில துணை செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகர செயலாளா் பி.பூங்காவனம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளரும், ஆற்காடு எம்எல்ஏவுமான ஈஸ்வரப்பன் நன்றி கூறினாா்.