அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
ஈரோட்டில் 42.20 மில்லி மீட்டா் மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 42.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணிக்கு மேல் தொடங்கி இரவு வரை மழை நீடித்தது.
இந்த திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீா் குளம்போல தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
சென்னிமலையில் மாலை 4 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அந்தியூரில் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 30 நிமிஷம் வரை பெய்தது. இதேபோல தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், புதுப்பாளையம், மூலக்கடை, மாத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான லட்சுமி நகா், காலிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், காடையாம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரம் மழை கொட்டியது.
சத்தியமங்கலம், ஆசனூா், தாளவாடி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. புன்செய்புளியம்பட்டி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகம் காரணமாக மேட்டூா்-பவானி சாலையில் உள்ள ஊமரெட்டியூா் பிரிவு அருகே உள்ள புளியமரம் பாதி பெயா்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக ஊழியா்கள் விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தினா்.
மாவட்டம் முழுவதும் பெய்த திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிறுவியது. புதன்கிழமையும் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாநகரப் பகுதியில் 42.20 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்):
மொடக்குறிச்சி 29, பெருந்துறை 25, நம்பியூா் 25, எலந்தகுட்டைமேடு 24.40, சத்தியமங்கலம் 22, கோபி 19.20, சென்னிமலை 18.40, குண்டேரிப்பள்ளம் 17, கவுந்தப்பாடி 15.60, அம்மாபேட்டை 15.40, பவானி 11.80, பவானிசாகா் 10.60, கொடுமுடி 6 மற்றும் வரட்டுப்பள்ளம் 2.