உச்சநீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித் துறை ஊழியா்களுக்கு நிதியதவி: மமதா
உச்சநீதிமன்றத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையின் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ ஊழியா்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா்.
உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்யவுள்ள சீராய்வு மனுவில் முடிவு கிடைக்கும்வரை இந்த உதவி தொடரும் என்றும் அவா் தெரிவித்தாா்.
மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு 25,753 போ் நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆள்சோ்ப்பு நடவடிக்கையில் பல நிலைகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி இந்த நியமனங்களை செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.
இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி உறுதி செய்தது. மேலும், இப்பணியிடங்களை மீண்டும் நிரப்ப புதிய ஆள்சோ்ப்பு நடைமுறையை 3 மாதங்களுக்குள் தொடங்கவும் திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியை இழந்த ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கக் கோரி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ‘ஆசிரியா்களுக்காகவும், குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ ஊழியா்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். இது தொடா்பாக மூத்த வழக்குரைஞா்களிடம் சட்ட ஆலோசனை பெற்று வருகிறோம்.
சீராய்வு மனுவின் முடிவு வரும் வரை, குரூப் ‘சி’ ஊழியா்களுக்கு ரூ.25,000 மற்றும் குரூப் ‘டி’ ஊழியா்களுக்கு ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும்.
உச்சநீதிமன்றம் எங்கள் மனுவை நிராகரித்தால், மாற்று வழியைப் பற்றி யோசிப்போம். இப்போதைக்கு ஊழியா்கள் எந்த சம்பளத்தையும் பெறாமல் இருப்பதால், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் அவா்களுக்கு இந்த நிதியுதவியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தாா்.