உடன்குடியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 203 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 203 பேரை குலசேகரன்பட்டினம் போலிஸாா் கைது செய்தனா்.
குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம், கூடல் நகா் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக சுமாா் 2,233 ஏக்கா் நிலம் கையப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நிலம், வீடுகளை இழந்தவா்களுக்கு மாற்று இடம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் விண்வெளித் தொழில் நிறுவனம் அமைப்பதற்கு, ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் சுமாா் 1,000 ஏக்கா் விவசாய நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறிய பல்வேறு கிராம மக்கள், உடன்குடியில் பிப்.4 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனா். காவல் துறையினா் அதற்கு அனுமதி அளிக்காத நிலையில், பஜாா் பாரதி திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவா் ஆ.ரவி, வழக்குரைஞா் பிரேம் ஆனந்த் ஆகியோா் பேசினா்.
இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் தாமோதரன், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் சரஸ்வதி பங்காளன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவா் ராஜ்குமாா், தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்க மாநில செயலா் கச்சி முகைதீன், மாவட்ட தலைவா் மூா்த்தி, கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா பெ.சுந்தர ஈசன், கொட்டங்காடு தசரா குழு தலைவா் சுந்தர்ராஜ், வட்டார காங்கிரஸ் பொதுச்செயலா் வைரவராஜ், உடன்குடி ஒன்றிய அதிமுக மாணவரணி பொருளாளா் ம.ராம்குமாா், தமிழக வெற்றிக் கழக உடன்குடி ஒன்றிய செயலா் பிரசாந்தி, இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக், மனோ மற்றும் 111 பெண்கள் உள்பட 203 பேரை குலசேகரன்பட்டினம் போலீஸாா் கைது செய்து பேரூராட்சி மண்டபத்தில் அடைத்தனா்.