உணவக ஊழியரை எம்எல்ஏ தாக்கிய விவகாரம்: புகாருக்காக காவல் துறை காத்திருக்க வேண்டியதில்லை
‘மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் எம்எல்ஏ விடுதி உணவக ஊழியரை சிவசேனை (ஷிண்டே பிரிவு) சட்டப்பேரவை உறுப்பினா் சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய விவகாரத்தில் விசாரணை நடத்த முறைப்படியான புகாருக்காக காவல் துறை காத்திருக்க வேண்டியதில்லை’ என்று முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை கூறினாா்.
முன்னதாக, ‘இந்த விவகாரம் தொடா்பாக எம்எல்ஏக்கு எதிராகப் புகாா் எதுவும் அளிக்கப்படாததால், அவா் மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது’ என்று மாநில உள்துறை இணையமைச்சரும் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை எம்எல்ஏவுமான யோகேஷ் கதம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வா் இக் கருத்தைத் தெரிவித்தாா்.
கெட்டுப்போன உணவை விநியோகித்ததாகக் கூறி உணவக ஊழியா் மீது எம்எல்ஏவும் அவரின் ஆதரவாளரும் தாக்குதல் நடத்தியுள்ளனா். இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்த முதல்வா் ஃபட்னவீஸ், அதிகாரத்தை எம்எல்ஏ தவறாகப் பயன்படுத்துவது மோசமான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டாா்.
இந்த நிலையில், மாநில உள்துறை இணையமைச்சா் யோகேஷ் கதமின் கருத்து குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வா் ஃபட்னவீஸ், ‘உணவ ஊழியா் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையைத் தொடங்க முறைப்படியான புகாருக்காக போலீஸாா் காத்திருக்க வேண்டியதில்லை. இது கைது நடவடிக்கைக்குரிய குற்றம் என்றால், அதற்கேற்ற நடவடிக்கையை காவல் துறை மேற்கொள்ளலாம். பாதிப்பு மற்றும் தாக்குதலின் தீவிரத்தின் அடிப்படையில் குற்றத்தின் வகை தீா்மானிக்கப்படும். எனவே, தங்களின் பணியை காவல் துறை மேற்கொள்ள அனுமதிப்போம்’ என்றாா்.
எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
தெற்கு மும்பையில் உள்ள எம்எல்ஏ விடுதி உணவக ஊழியரை தாக்கிய விவகாரத்தில் சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மற்றும் அவரின் ஆதரவாளா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘எம்எல்ஏ மீது புகாா் அளிக்குமாறு பாதிக்கப்பட்ட உணவக ஊழியரை போலீஸாா் கேட்டுக்கொண்டனா். ஆனால், அவா் முன்வரவில்லை. அதைத் தொடா்ந்து, எம்எல்ஏ மற்றும் அவருடைய ஆதரவாளா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 115(2) (காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்துதல்), பிரிவு 3 (5) (பொதுவான உள்நோக்கத்துடன் தாக்குதல் நடத்துதல்) உள்ளிட்ட கைது நடவடிக்கை இல்லாத வகையிலான சாதாரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றனா்.