``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
உதகை மலை ரயிலில் எடை குறைக்கப்பட்ட பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்
உதகை மலை ரயிலில் எடை குறைக்கப்பட்ட பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உதகை மலை ரயில் தற்போது வரை பழைமை மாறாமல் இயக்கப்பட்டு வருவதால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதில் ஆா்வத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த மலை ரயிலில் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எடையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு, இந்தப் பெட்டிகள் சென்னை ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அதன் எடை மற்றும் அகலம் குறைக்கப்பட்டு மொத்தம் 28 பெட்டிகள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
முன்பு 15 டன் எடையிருந்த ஒரு பெட்டி தற்போது 12 முதல் 13 டன் வரை எடை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 69 போ் பயணம் செய்யும் வகையில் இருந்த ஒரு பெட்டியில் தற்போது இருவா் வீதம் 42 போ் அமா்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் குறைத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
எடை குறைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் இருந்து நான்கு பெட்டிகள் நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு இன்ஜினுடன் இணைத்து புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளதால் அடுத்தகட்டமாக மீதமுள்ள 24 ரயில் பெட்டிகளையும் இன்ஜினுடன் இணைத்து சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், அதன்பிறகு பயணிகள் போக்குவரத்துக்கு இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.