பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்...
உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது.
இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் 4 போ் உயிரிழந்ததாகவும், 70 போ் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா்.
கங்கோத்ரி வழித்தடத்தில் முக்கிய நிறுத்தமான தராலி கிராமத்தில் செயல்பட்டு வந்த சுமாா் 20 முதல் 25 உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் திடீா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை 4 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், கனமழை தொடர்வதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ராணுவ கர்னல் ஹர்ஷ்வர்தன் தலைமையில் 150 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா், இந்திய-திபெத்திய எல்லைக் காவல்படை மற்றும் மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் ஏராளமானோா் சிக்கியிருப்பதால், மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் படையினா் தேடி வருகின்றனா். மீட்புப் பணியில் இந்திய ராணுவத்தின் எம்ஐ-17 மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தராலியில் நடைபெறும் மீட்புப் பணிகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த உத்தரகண்ட் முதல்வர், விடுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கும் கிராம மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட கிராம மக்களுடன் தொடர்பை ஏற்படுத்த செல்போன் டவர்களை சரிசெய்வதற்கான உத்தரவையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.