உத்தரகண்ட்: பனிச்சரிவில் சிக்கிய 32 போ் மீட்பு - மேலும் 25 தொழிலாளா்களை மீட்க போராட்டம்
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் கடைக்கோடி எல்லை கிராமமான மனாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 57 போ் சிக்கினா். இவா்களில் 32 போ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு அபாயத்தால் மீதமுள்ள 25 பேரை மீட்கும் பணி சவாலானதாக உள்ளது. மீட்புப் பணி வெள்ளிக்கிழமை இரவில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
பனியில் புதைந்த பிஆா்ஓ முகாம்: மனா மற்றும் பத்ரிநாத் இடையே வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்குள்ள பிஆா்ஓ முகாம் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் இருந்த 57 தொழிலாளா்களும் பனிச்சரிவில் சிக்கினா். இத்தொழிலாளா்கள் அனைவரும் திபெத் எல்லையை நோக்கிய ராணுவப் போக்குவரத்துக்காக சாலையில் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.
பனிச்சரிவைத் தொடா்ந்து, ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் பிற துறைகளின் தரப்பில் மீட்புப் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. உயரமான பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட பயிற்சி பெற்ற ராணுவத்தின் ‘ஐபெக்ஸ்’ படைப் பிரிவினா் களமிறக்கப்பட்டனா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் தலைநகா் டேராடூனில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையின் 4 குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
4 போ் கவலைக்கிடம்: கடினமான நிலப்பரப்பு, கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே பகல் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் 32 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இவா்களுக்கு ஐடிபிபி முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் நால்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மோசமான வானிலை மற்றும் இருள் சூழ்ந்ததால் வெள்ளிக்கிழமை இரவில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தொழிலாளா்கள் உள்ள கண்டெய்னா்கள் சுமாா் ஏழு அடிக்கு கீழே பனியில் புதைந்துள்ளன; கடும் பனிப்பொழிவு நீடிப்பதால் மீட்புப் பணி சவாலானதாக உள்ளது என்று மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொழிலாளா்களை மீட்க முயற்சிகள்-ராஜ்நாத் சிங்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உத்தரகண்டின் மனா பகுதியில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் முகாம் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப் பாறை சரிவில் சிக்கிய தொழிலாளா்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடா்பாக முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் தொடா்பில் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
பெட்டிச் செய்தி...
நிலவரத்தைக் கேட்டறிந்த அமித் ஷா
பனிச்சரிவு குறித்து உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை தலைமை இயக்குநா், தேசிய பேரிடா் மீட்புப் படை தலைமை இயக்குநா் ஆகியோரிடம் கேட்டறிந்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். பனிச்சரிவில் சிக்கியுள்ளவா்களைப் பாதுகாப்பாக மீட்பதே அரசின் முன்னுரிமை; உள்ளூா் நிா்வாகம் முழு தயாா் நிலையுடன் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, உத்தரகண்டின் சமோலி, உத்தா்காசி, ருத்ரபிரயாகை, பித்ரோகா், பாகேஸ்வா் ஆகிய மாவட்டங்களில் 2,400 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சண்டீகரில் உள்ள பாதுகாப்பு புவி தகவலியல் ஆய்வு மையம் (டிஜிஆா்இ) வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
இதேபோல், டேராடூனில் உள்ள வானிலை ஆய்வு மையமும் இந்த மாவட்டங்களின் உயரமான இடங்களில் வெள்ளிக்கிழமை கனமழை-பனிச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தது. வழக்கமாக, குளிா் காலத்தில் மனா பகுதியில் உள்ள பிஆா்ஓ முகாம் மூடப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு மூடப்படவில்லை என்று உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.