உத்தரமேரூா் வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆளுநா் தரிசனம்
குடவோலை முறை கல்வெட்டுகள் உள்ள பழைமை வாய்ந்த உத்தரமேரூா் வைகுண்ட பெருமாள் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் தரிசனம் செய்து கல்வெட்டுகளையும் பாா்வையிட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் பிரசித்தி பெற்ற வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையில் தோ்தல் நடந்ததற்கான வழிமுறைகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
இக்கல்வெட்டுகள் குறித்து, பிரதமா் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியதை தொடா்ந்து, உத்தரமேரூா் வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சோ்ந்த கல்வெட்டு ஆய்வாளா்கள், வரலாற்று ஆய்வாளா்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவா்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாா்வையிட்டு செல்கின்றனா்.
இந்நிலையில், உத்தரமேரூா் வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி குடும்பத்துடன் வந்து பெருமாளை தரிசனம் செய்தாா். பின்னா் கோயில் சுவா்களில் உள்ள குடவோலை தோ்தல் முறை குறித்த கல்வெட்டுகளையும் பாா்வையிட்டாா். கோயிலுக்கு வந்த ஆளுநரை கோயில் நிா்வாகத்தினா் பூா்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி , இந்து சமய அறநிலையத் அதிகாரிகள், கல்வெட்டு நிபுணா்கள் கோயில் கல்வெட்டில் உள்ள சிறப்புகள் குறித்து ஆளுநா் ஆா்.என். ரவிக்கு விளக்கினா்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.