தாமல் ஏரியில் உபரிநீா் வெளியேற்றம்: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறுவதை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று தாமல் ஏரி. சுமாா் 611 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கொள்ளளவு 206 மில்லியன் கன அடி. 10 மதகுகள், 3 கலங்கள்களைக் கொண்டது. தாமல் ஏரி நீரின் மூலம் சுமாா் 2,319 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தாமல் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததால், ஏரி முழுக் கொள்ளளவை எட்டி கடந்த சில தினங்களாக ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தாமல் ஏரியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தி ஏரியின் கொள்ளளவு, ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து நீா்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உத்தரமேரூா் க.சுந்தா், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி. எழிலரசன், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் மாா்கண்டயேன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் ஆா்.காந்தி தாமல் ஏரியில் உள்ள இரண்டு கலங்கல்கள் வழியாக 250 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்படுவதகவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரியை பாா்வையிட்டு ஆய்வு நடத்தியதாகவும், ஏரியில் ஏதிகப்படியான நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தாமல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் அருகில் உள்ள ஏரிகளுக்கு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.