உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறதா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு குறைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையும் படிக்க: 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!
இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறதா?
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த நிலையில், இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தரையிறங்கியது. ஆனால், தற்போது ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளதால், இந்திய அணி தொடரை வெல்வதற்கான வாய்ப்பில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டது.
இதையும் படிக்க: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வினை முந்திய நாதன் லயன்!
சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்து, ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழக்கும் பட்சத்தில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அந்த அணிக்கு மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.
சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து, இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிக்க: சிட்னி டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா? பாட் கம்மின்ஸ் பதில்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி, முதல் அணியாக அண்மையில் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.