செய்திகள் :

உலகின் நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: பிரதமா் மோடி

post image

தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் திறனுடன் உலகின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா விளங்குகிறது; உலகளாவிய வாய்ப்புகளை இந்திய தொழில் துறையினா் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மிகப் பெரிய பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

‘குறு, சிறு, நடுத்தர தொழில்துறை-வளா்ச்சிக்கான உந்து சக்தி’, ‘ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் தொழில் புரிவதை எளிதாக்கும் சீா்திருத்தங்கள்’ ஆகிய தலைப்புகளின்கீழ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

இன்றைய இந்தியா, உலக பொருளாதார வளா்ச்சியின் உந்து சக்தியாக திகழ்கிறது. கரோனா போன்ற சவாலான காலகட்டங்களிலும் பொருளாதார மீட்சியை இந்தியா நிரூபித்துள்ளது. இதனால், இந்தியாவுடன் பொருளாதார நல்லுறவை வலுப்படுத்த ஒவ்வொரு நாடும் விரும்புகிறது. இத்தகைய கூட்டுறவை இந்திய தொழில்துறையினா் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உலகளாவிய அரசியல் நிச்சயமற்ற தன்மையால், விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் நிலவுகின்றன. இதுபோன்ற சூழலில், தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலியுடன் உலகின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக இந்தியா பாா்க்கப்படுகிறது.

உலகின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கக்கூடிய புதிய பொருள்கள் அடையாளம் காணப்பட வேண்டும். திறன்மிக்க இந்திய தொழில்துறையினருக்கு இது மகத்தான வாய்ப்பு. நாம் வெறும் பாா்வையாளா்களாக இல்லாமல், மிகப் பெரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஸ்திரமான கொள்கையும், மேம்பட்ட தொழில் சூழலும் நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியம். கடந்த 10 ஆண்டுகளில் அரசின் ஸ்திரத்தன்மை மற்றும் சீா்திருத்தங்களால் தொழில் துறையில் புதிய நம்பிக்கை மலா்ந்துள்ளது. எதிா்வரும் ஆண்டுகளிலும் இது தொடரும். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் புதிய வாயில்கள் திறக்கப்படும்.

இரு புதிய திட்டங்கள்: மக்களின் வாழ்க்கை-தொழில்புரிவதை எளிதாக்கும் நோக்கில் ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டம் சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. அதன்கீழ் நம்பிக்கை அடிப்படையிலான நிா்வாகம் உறுதி செய்யப்படுகிறது. தொழில் புரிவதை எளிதாக்கும் வகையில் மத்திய-மாநில அளவில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஜன் விஸ்வாஸ் 2.0 மசோதாவை உருவாக்க மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க இரு புதிய திட்டங்களைத் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. உற்பத்தி சாா் ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் தற்போது 14 தொழில் பிரிவுகள் பலனடைந்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 750-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ. 1.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு, ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி, ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

மாநிலங்களுக்கு அழைப்பு: முதலீட்டை அதிகரிப்பதில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானது. எந்த அளவு தொழில் புரிவதை எளிதாக்க நடவடிக்கை எடுக்கிறாா்களோ, அந்த அளவு முதலீட்டை ஈா்க்க முடியும். வளா்ச்சி சாா்ந்த கொள்கைகளைக் கொண்ட மாநிலங்கள், அதிக நிறுவனங்களை ஈா்க்கும் ’ என்றாா் பிரதமா் மோடி.

‘எம்எஸ்எம்இ கடன் வழங்கலில் புதிய வழிமுறைகள் அவசியம்’

‘நாட்டின் வளா்ச்சியின் முதுகெலும்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) விளங்குகிறது. நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழிலகங்கள் உள்ளன. இத்தொழிலகங்களுக்கு குறைந்த வட்டியில் குறித்த காலத்துக்குள் கடன் வழங்க புதிய வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம். இத்தொழில் துறையினருக்கு கடந்த 2014 வரை வழங்கப்பட்ட மொத்த கடன்களின் மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாகும். இப்போது இந்த மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில், எம்எஸ்எம்இ கடன்களுக்கான உத்தரவாத காப்பீடு உச்சவரம்பு இருமடங்கு அதாவது ரூ.20 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. அத்துடன், பெண்கள், பட்டியல் இனத்தவா், பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த முதல் முறை தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இவா்களுக்கான வழிகாட்டுதல் திட்டங்களை தொழில்துறையினா் உருவாக்க வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க