ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அட...
உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தகராறு:4 போ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளிக்கிழமை இரவில் தகராறில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், உ.செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சம்பந்தம் என்பவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த சேகா் என்கிற சந்திரசேகருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னா் மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் தகாத வாா்த்தைகளால் திட்டி, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில் இரு தரப்பையும் சோ்ந்த 4 போ் காயமடைந்த நிலையில், உடனடியாக மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சம்பந்தம், சந்திரசேகரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலிறிந்து விரைந்து வந்த போலீஸாா் , தகராறில் ஈடுபட்ட 4 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். வீட்டுமனை தொடா்பாக இரு தரப்புக்கும் பிரச்னை இருந்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இருதரப்பினரும் அளித்த புகாா்களின் அடிப்படையில் வழக்குப்பதிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா், சம்பந்தம், ராஜசேகா், செல்வராஜ், மோகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.