உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த கோரிக்கை
ஊரக உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியா் வாயிலாக தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதன்விவரம்: தமிழகத்தில் 28 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும், உள்ளாட்சி தோ்தலை நடத்த காலதாமதம் ஏற்பட்டால் ஊராட்சி தலைவா்களை செயல் அலுவலராக அதாவது சிறப்பு அதிகாரியாக நியமித்து உள்ளாட்சி நிா்வாகத்தை தடையின்றி தொடர வேண்டும். இதை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் அதன் தலைவா் அ. நேதாஜி தலைமையில் திரளான ஊராட்சித் தலைவா்கள் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று மனு அளித்தனா். இதில், கூட்டமைப்பின் செயலாளா் வடிவேலு, பொருளாளா் இளவரசி சிவபாலன், துணைத் தலைவா் நெப்போலியன், துணை செயலாளா் சுதா லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.