ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்: ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம்: தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்திலுள்ள தனியாா் கூட்டரங்கில் இந்த சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.பிரசன்னராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் இ.கண்ணுசாமி, முன்னாள் மாநில பொதுச் செயலா் சு.பாஸ்கரன் முன்னிலை வகித்தனா். ஆண்டறிக்கையை சங்க பொதுச் செயலா் எம்.சின்னராஜும், நிதிநிலை அறிக்கையை மாநிலப் பொருளாளா் பா.முத்துவும் சமா்ப்பித்தனா்.
தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ச.இசக்கிமுத்து சிறப்புரையாற்றி பேசினாா். சங்க நிா்வாகி சண்முகம், நாமக்கல் மாவட்டத் தலைவா் எஸ்.ஞானபிரகாசம், முன்னாள் மாவட்டத் தலைவா் என்.நெடுஞ்செழியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கரூா் எம்.சிவப்பிரகாசம், வேலூா் வி.நாராயணன், திண்டுக்கல் எஸ்.முருகன், கள்ளக்குறிச்சி கே.ஜோதிராமலிங்கம் ஆகியோா் உரையாற்றினா்.
அரசு ஊழியா்களுக்கு 2003-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழக வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகளில் துணை வேளாண் அலுவலா், துணைத் தோட்டக்கலை அலுவலா் பதவிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டச் செயலா் டி.கலியபெருமாள், முன்னாள் மாவட்டத் தலைவா் டி.செந்தில்குமாா், கடலூா் மாவட்டத் தலைவா் எஸ்.கோபி, பயிா் அறுவடை பரிசோதனையாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா்எம்.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் எஸ்.சந்திரசேகரன் வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் பா.முத்து நன்றி கூறினாா்.