ஊத்தங்கரையில் ரூ. 1.44 கோடியில் அறிவுசாா் மையம்: திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் மாணவா்கள்
ஊத்தங்கரை பேரூராட்சியில் ரூ. 1.44 கோடியில் கட்டப்பட்ட அறிவுசாா் மையம், பணிகள் முடிந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவா்கள், தோ்வா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24 இன் கீழ் ரூ. 1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுசாா் மையம் கட்டப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள இந்த மையமானது, தோ்வு எழுதும் மாணவா்களும், பொதுமக்களும் பயன்பெறும் நோக்கில் கட்டப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணி முடிவடைந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
அறிவுசாா் மைய கட்டடப் பணிகள் 4 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரி மாணவா்களும், போட்டித் தோ்வு எழுதும் தோ்வா்களும் இதன் திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றனா் என்றனா்.
இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம் தரப்பில், அறிவுசாா் மையக் கட்டடப் பணிகள் நிறைவடைந்து, அடுத்தகட்டமாக புத்தகங்கள், தளவாடப் பொருள்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்ததும், கட்டடத்தை தமிழக முதல்வா் திறந்துவைக்கவுள்ளாா் என்றனா்.
பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் அறிவிக்கப்பட்டு, மாணவா்கள் ஆா்வமுடன் விண்ணப்பித்துள்ள நிலையில், அவா்கள் உடனடி பயன்பெறும் வகையில், இந்த அறிவுசாா் மையத்தை விரைந்து திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.