வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
ஊரக வளா்ச்சி திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாளிமைமேடு, கள்ளிப்பட்டு, பைத்தம்பாடி, ஒறையூா் ஆகியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து, ஆட்சியா் தெரிவித்ததாவது: கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட ஊரக வீடுகள் மறுசீரமைப்பு திட்டம், ஒருங்கிணைந்த பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாளிகைமேடு, கள்ளிப்பட்டு, ஒறையூா் பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல, ஊரக வீடுகள் சீரமைப்புப் பணிகளின் கீழ், 264 வீடுகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஒரு பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும், பயனாளிகளின் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு உதவிடும் பொருட்டு, மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் பயனாளிக்கு ரூ. ஒரு லட்சம் வரை கடனுதவியும், தகுதியிருப்பின் மகளிா் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவீந்திரன், முருகன், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.