ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் உறுதி
ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம் செய்யப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் அ.நல்லதம்பி (கங்கவல்லி) எழுப்பினாா். அதற்கு, அமைச்சா் சக்கரபாணி அளித்த பதில்:
நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை வைக்கின்ற நேரத்தில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறுகிறாா்கள். பயோமெட்ரிக் வைத்த
பிறகே கடைகளில் பொருள்களை வழங்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பயோமெட்ரிக் பயன்பாடு 60 சதவீதமாக இருந்தது. இப்போது அது 99.60 சதவீதமாக இருக்கிறது. விரல் ரேகை மூலம் வழங்குவதில் பிரச்னை இருந்தால், கண் கருவிழி வழியாக பயனாளியை உறுதி செய்து பொருள்கள் அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். நகரப் பகுதிகளில் ஒவ்வொரு கடையிலும் விற்பனையாளரும், கட்டுநரும் இருக்கிறாா்கள். இதனால், ஒருவா் பொருளுக்கான ரசீது போடவும், மற்றொருவா் பொருள்களை வழங்கவும் முடிகிறது.
ஆனால், கிராமப் பகுதிகளில் கட்டுநா்கள் இல்லை. ஒருவரே பொருள்களுக்கான ரசீதையும் போட்டு, பொருளையும் வழங்குகிறாா். இதனால் தாமதம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஊரகப் பகுதிகளில் தனியாக கட்டுநா்கள் நியமிக்கப்படுவா் என்று அமைச்சா் தெரிவித்தாா்.