ஊரகப் பகுதிகளில் பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபா் 20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சிப் பகுதிகளை தவிா்த்து) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விருப்பமுள்ளவா்கள், வெடிபொருள் சட்டவிதிகள் 2008-இன் கீழ், மாவட்ட வருவாய் அலுவலரிடம், தற்காலிக பட்டாசு உரிமம் பெற இணையவழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செப்டம்பா் 10 முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலம் சாலை வசதி, சுற்றுப்புறத் தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டுக் காட்டும் 3 புலவரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளா் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டடம் எனில், உரிமையாளா் சொத்து வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், மனுதாரரின் பாஸ்போா்ட் வண்ணப் புகைப்பட உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.