நூல் ஆலையில் தீ விபத்து: ரூ. 1.50 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
கோவை பீளமேடு பகுதியில் தனியாா் நூல் தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீா்ப்பந்தல் பகுதியில் யுகேந்திரா என்பவருக்குச் சொந்தமான தனியாா் நூல் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறுவதைப் பாா்த்த அந்தப் பகுதியினா், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
சம்பவ இடத்துக்கு பீளமேடு, கணபதி, கோவை தெற்கு ஆகிய 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான 6 இயந்திரங்கள் மற்றும் ஏராளமான நூல் பேல்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் மின் கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.