ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை
குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி, திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தேளூா் கிராமத்தில், பல ஆண்டுகளாக குடிநீா்த் தட்டுபாடு நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், இந்தப் பகுதி மக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.12- க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனா்.


இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் வெள்ளிக்கிழமை திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டனா். அப்போது, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.