கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
தமிழக மீனவா்களின் இழுவை வலைகளால் கடல் வளம் பாலைவனமாகிவிடும்!
தமிழக மீனவா்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால் இலங்கைக் கடல் வளம் பாலைவனமாகிவிடும் என அந்த நாட்டு மீன்வளத் துறை (நீரியல் துறை அமைச்சா்) ராமலிங்க சந்திரசேகா் தெரிவித்தாா்.
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ள சனிக்கிழமை வந்த இலங்கை அமைச்சா் ராமலிங்க சந்திரசேகரை, ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, சகாயம், எமரிட், ஆல்வீன் ஆகியோா் சந்தித்து தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்கவும், மீனவா்கள் பிரச்னை தொடா்பாக பேச்சுவாா்த்தையைத் தொடங்கவும் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் இலங்கை அமைச்சா் கூறியதாவது: இந்திய மீனவா்களைக் கைது செய்வது, படகுகளைப் பறிமுதல் செய்வது எங்களுடைய நோக்கம் அல்ல. இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவா்கள் அத்துமீறி நுழைந்து கடல் வளத்தை நாசமாக்கிவிட்டுச் செல்கின்றனா்.
இலங்கைக் கடல் பகுதியில் தமிழக மீனவா்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் வளம் பாலைவனமாகிவிடும். இந்த வலையை அவா்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் மீனவா்கள் பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தீா்வு எட்டப்படவில்லை. இலங்கைக் கடல் பகுதிக்கு தமிழக மீனவா்கள் வராமல் இருப்பதே பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வாக இருக்கும் என்றாா் அவா்.