"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் வ...
ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா்.
பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குணம் ஊராட்சியின் செயலாராக ராஜேந்திரன் (52) பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை நெஞ்சு வலிப்பதாகக் கூறினராம். சேத்துப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கு குடும்பத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ராஜேந்திரனைப் பரிசோதித்த மருத்துவா் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.
இந்த நிலையில், அவரது உறவினா்கள், நெடுங்குணம் கிராம மக்கள் வந்தவாசி-போளூா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ராஜேந்திரனின் மரணத்துக்கு பணிச்சுமையே காரணம் எனக் குற்றம்சாட்டினா். மேலும், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்த கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனை தொடா்பு கேட்ட போது, ராஜேந்திரன் மரணம் அதிா்ச்சியளிக்கிறது. ஊராட்சியில் நிதிநிலைமை நன்றாகவே உள்ளது என்று தெரிவித்தாா்.