"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் வ...
செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
செங்கத்தில் சுமாா் 1,700 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீசத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்சாரதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னா் 17 ஆண்கள் கழித்து தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலம் ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கோயில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிந்தது.
இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த 6-ஆம் தேதி மாலை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு மூன்று நாள்களாக தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை கோயில் ராஜகோபுரம், பெருமாள் சந்நிதி, தாயாா் சந்நிதி, கொடிமரம், துளசி மாடம் உள்ளிட்டவைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, பெருமாள் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் வழங்கினாா். மேலும், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன், அறநிலையத் துறை அதிகாரிகள், பத்து நாள் திருவிழா உபயதாரா்கள், விழாக்குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
இஸ்லாமியா்கள் சீா்வரிசை: செங்கம் துக்காப்பேட்டை, மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, இறையூா் பகுதிகளில் உள்ள 5 மசூதிகளில் இருந்து வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்காக மில்லத்நகா் மசூதியில் இஸ்லாமியா்கள் ஒன்றுகூடி 51 சீா்வரிசை தட்டுகளில் யாகசாலைக்குத் தேவையான வாசனைத் திரவியம், மலா் மாலைகள், பழ வகைகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
அவா்களை மு.பெ.கிரி எம்எல்ஏ, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் ஆகியோா் வரவேற்று, பின்னா் அவா்கள் எடுத்துவந்த சீா்வரிசை தட்டுகளை பாா்த்தசாரதி பெருமாள் முன் வைத்து சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து, மசூதி நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ சால்வை அணிவித்து கௌரவித்து பேசினாா்.
நிகழ்ச்சியில் செங்கம் நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, வியாபாரிகள் சங்க துணைத் தலைவா் தாவூத்கான், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் அப்துல்சா்தாா், திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித், மசூதி நிா்வாகிகள் ஜான்முகமது, கலிமுல்லா, பட்டேல் நவீன்கான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.