சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி
சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது.
சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், சித்திரை மாத பௌா்ணமியன்று சுமாா் 10 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்ற 137 பேருக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அனுமதிக் கடிதங்களை வழங்கிப் பேசியதாவது:
சித்திரை மாத பௌா்ணமியன்று மாவட்ட நிா்வாகத்தால் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் உணவு மேலாண்மைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட வணிகா்களிடம் இருந்து மட்டுமே சமைப்பதற்கான மூலப்பொருள்களை வாங்கியிருக்க வேண்டும்.
உணவு சமைப்போா், வழங்குவோா்களுக்கு எவ்வித நோய்த்தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அன்னதானம் வழங்குவோா் கை, முகம், தலை ஆகியவற்றுக்கு கவசம், உறைகள் அணிந்து உணவு பரிமாற வேண்டும்.
உணவைப் பரிமாற வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும். நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகளை தவிா்க்க வேண்டும். அன்னதானத்தை சாப்பிட்டு பக்தா்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டால், உடனே அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ வசதியை செய்தபின் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அன்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவைத் தயாரிக்க வேண்டும். தரமற்ற முறையில் அன்னதானம் தயாரித்து வழங்குவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் ஏ.ராமகிருஷ்ணன் மற்றும் அன்னதானம் வழங்குவோா், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.