ஊர்விட்டு ஊர் வந்து... மெட்ராஸ்காரன் - திரை விமர்சனம்!
நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் உருவான மெட்ராஸ்காரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னையிலிருக்கும் நாயகன், நாயகிக்கு புதுக்கோட்டையில் திருமணம் நடக்க உள்ளது. காதல் திருமணம் என்றாலும் தன்னுடைய சொந்த ஊரில் சொந்த பந்தங்கள் சூழ கல்யாணம் நடக்க வேண்டுமென நாயகன் ஆசைப்படுவதால் அங்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமடைகின்றன. வீட்டில் நலங்கு வைத்தபின் எங்கும் செல்ல வேண்டாம் என நாயகனிடம் உறவினர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அதையும் மீறி வருங்கால மனைவியைப் பார்க்க காரை எடுத்துச் செல்கிறார். வழியில் விபத்து ஏற்படுகிறது. அதில், நிறைமாத கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) பாதிக்கப்படுகிறார். உடனடியாக, அவரை மருத்துவனைக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கு, கல்யாணிக்கு என்ன நடந்தது? இந்த விபத்தை வைத்து நடக்கும் குழப்பங்கள், பழிவாங்கல்கள் என விரிகிறது மெட்ராஸ்கரன் கதை.
ரங்கோலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வாலி மோகன் தாஸ் இப்படத்தில் குற்றவுணர்ச்சியை அடிப்படையாக வைத்து படத்தின் கதையை எழுதியுள்ளார். விபத்து, சாதி, அரசியல், முன்பகை என திரைக்கதையில் பல பக்கங்களைத் தொட்டு பதிவு செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளைத் திணிப்பாக வைக்காமல் அதற்குப் பின் வலுவான காரணங்களை வைத்திருப்பதும் எதார்த்தமான ஆக்சனாக திட்டமிட்டதும் நன்றாக இருந்தன.
ஊர்விட்டு ஊர் வரும் நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையில் இக்கட்டில் சிக்கி சிறை செல்ல நேர்வதும், தன் குற்றவுணர்வுக்காக மன்றாடுவதும் என சில காட்சிகள் உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, நடிகர் கலையரசன் அறிமுகமாகும் காட்சியும் அக்கதாபாத்திரத்தின் வடிவமும் சிறப்பாக இருந்தது. ஆனால், காட்சியின் தாக்கம் முழுமை பெறுவதற்கு முன்பே திரைக்கதை தடுமாற்றதால் நன்றாக வந்திருக்க வேண்டிய இடங்களும் சோர்வை அளிக்கின்றன.
முதல் பாதியில் எதிர்பார்ப்பைத் தூண்டும் கதையும் சண்டைக் காட்சிகளும் இரண்டாம் பாதியில் வேகம் இழக்கின்றன. கொஞ்சம் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ஷேன் நிகாம் இப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். மலையாள முகத்தை தைரியமாக எப்படி களமிறக்கினார்கள் எனத் தெரியவில்லை. ஷேன் தோற்றத்திலும் வசன உச்சரிப்பிலும் மலையாளியாகவே தெரிகிறார். தமிழ் நாயகனாகத் தெரியவில்லை. கேரளத்தில் படித்திருந்தார் இல்லை வளர்ந்தார் என சுருக்கமாகச் சொல்லி நியாயம் சேர்த்திருக்கலாம்.
ஆனால், இயக்குநர் அதைச் செய்யவில்லை. இவர் தமிழர்தான் என நம்ப வைக்கும் முயற்சியில் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். உணர்ச்சிகளைச் சரியாகக் கையாண்டதால் அந்தக் குறையை ஷேன் குறைக்கிறார். இருப்பினும், தமிழ் நடிகரையே நாயகனாக வைத்திருக்கலாம் என்றே தோன்றியது.
நாயகி நிஹாரிகா கொனிடேலா தமிழ் முகமாகவும் இல்லை நடிப்பும் சரியாக வரவில்லை. ஆனால், காதல் காத்திருப்பு என போலியாக எதையும் எழுதாமல் நிதர்சனம் இதுதான் என நாயகி கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பது நியாயமாக இருக்கிறது.
படத்தின் பெரிய பலம் கலையரசன். நடிப்பில் கச்சிதமான உடல்மொழியையும் வசன உச்சரிப்பையும் செய்து தனக்கான காட்சிகளில் கதையைத் தாங்கிப்பிடிக்கிறார். சமீப காலமாக கொலைக்கு ஆளாகும் அல்லது பலியாகும் கதாபாத்திரமாகவே நடித்தவருக்கு இப்படம் ஆறுதலாக அமைந்திருக்கிறது. நல்ல கதையில் இருக்க வேண்டும் என கலையரசன் விரும்புவது அவர் படத்தேர்வுகளிலேயே தெரிகிறது. அதை இயக்குநர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். வாலி மோகன் தாஸ் அதில் வென்றிருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு மாறுபட்ட வேடம். கருணாஸ், பாண்டியராஜ் உள்ளிட்டவர்களும் கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
காட்சிகளின் பலத்தைக் குறைக்கக் கூடாது என்பதற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் நன்றாக இசையமைத்திருக்கிறார். சில இடங்களில் பின்னணி இசை தனித்துவமாக இருக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் நன்றாக இருந்தன. சண்டைக்காட்சிகளும் நம்பும்படியாக லாஜிக்கை மீறாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
சாதாரணமான விபத்துக்குப் பின் இவ்வளவு விஷயங்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்பதை யோசித்த இயக்குநர் அதை சுவாரஸ்யமாக்குவதிலும் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல கமர்சியல் படமாகவே இருந்திருக்கும்.
பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்திருக்கும் மெட்ராஸ்காரன் அடுத்தது என்ன என்கிற திருப்பங்களுடன் இருந்தாலும் சில இடங்களில் சோர்வைக் கடத்துவதும் ஊகிக்கும்படியாக சில காட்சிகள் இருப்பதும் பின்னடைவு. திரில்லர் டிராமா படங்களில் ஆர்வம் இருந்தால் இந்த மெட்ராஸ்காரரை எதிர்பார்ப்பின்றி பார்க்கலாம்.