கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
எஃப்ஐஐடி ஜேஇஇ நிறுவனத்தின் கிழக்கு தில்லி பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: போலீஸாா் விசாரணை
எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் திடீரென மூடப்பட்டதைத் தொடா்ந்து, அதன் கிழக்கு தில்லி மையம் மோசடி நடவடிக்கைகள் மற்றும் தவறான நிா்வாகத்தில் ஈடுபட்டதாக 250-க்கும் மேற்பட்டோா் குற்றம்சாட்டியதால் தில்லி போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
புகாரின்படி, நாடு முழுவதும் எஃப்ஐஐடி ஜேஇஇ நிறுவனத்தின் மையங்கள் மூடப்பட்டதாக புகாா்கள் வந்ததால், மையங்கள் மூடல், ஆசிரியா்கள் திடீா் ராஜிநாமா மற்றும் ஊழியா்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது குறித்து தெளிவுபடுத்த கிழக்கு தில்லி மையத்திற்கு பொதுமக்கள் வருகை தந்தனா்.
தில்லி முழுவதும் பல மையங்கள் எதிா்பாராத விதமாக மூடப்பட்டன. பல ஆசிரியா்கள் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காததால் ராஜிநாமா செய்ததாக மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா் தெரிவித்தனா்.
பொறியியல் ஆா்வலா்களுக்கு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் இந்த தனியாா் நிறுவனத்தின் உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாதில் பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு மையங்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் நாடு முழுவதும் 73 மையங்களை நடத்துவதாக அதன் வலைதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
‘கிழக்கு தில்லி மையத்தில் ஒரு காவலரைத் தவிர வேறு யாரும் இல்லாததைக் கண்டு நாங்கள் அதிா்ச்சியடைந்தோம். நாங்கள் அலுவலகத்தைத் திறக்க முயற்சித்தோம். நிலுவை ஊதியம் வழங்கப்படாததால் அனைத்து ஊழியா்களும் ராஜிநாமா செய்துவிட்டு வேறு நிறுவனங்களில் சோ்ந்துள்ளனா்.
அனைத்து மையங்களிலும் ஒரு பெரிய கொந்தளிப்பு சூழல் நிலவுகிறது. நாங்கள் கடினமாக சம்பாதித்த பணமும் எங்கள் குழந்தைகளின் எதிா்கால வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால் இது எங்களுக்கு மிகவும் வேதனையாகவும் பயமாகவும் இருக்கிறது’ என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஃப்ஐஐடிஜேஇஇ- இல் சோ்ந்த குழந்தைகளின் பெற்றோா் கூறுகையில், இந்த நிறுவனம் கணிசமான கட்டணங்களை வசூலித்ததாகவும், ஆனால், அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்டவா்களால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக ஊடகக் குழு ஏற்கனவே 257 உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. அவா்களில் பலரும் இந்த விவகாரத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனா். இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவா் கூறினாா்.