எண்ணெய் ஆலையில் தீவிபத்து
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி எண்ணெய் ஆலையில் திங்கள்கிழமை தீ வி பத்து ஏற்பட்டது.
ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில், சாகுல் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பலவிதமான எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதற்காக ஆலையின் முதல் தளத்தில் எள், கடலை, தேங்காய் உள்ளிட்ட மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை திடீரென முதல் தளத்தில் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. தகவலின் பேரில் புதுக்கோட்டை, ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா்.
இருப்பினும் ஆலையில் இருந்த பொருள்கள் அனைத்தும் தீக்கிரையாகின. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.