செய்திகள் :

எளிமையான கடன் நடைமுறைகள்: ரிசா்வ் வங்கியுடன் கைகோக்கும் தமிழக அரசு

post image

விவசாயிகள், குறு தொழில்முனைவோா் வங்கிக் கடன்களை எளிதில் பெறும் வகையில் இந்திய ரிசா்வ் வங்கியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இந்திய ரிசா்வ் வங்கியின் புத்தாக்க மையத்துடன் இணைந்து வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கடன் வழங்கும் அமைப்பு தொழில்நுட்பத்தை பல்வேறு வங்கிகள் மூலம் விரைவில் அமல்படுத்தவுள்ளது.

இதன்மூலம் விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள், குறு, சிறு தொழில்முனைவோா் என அனைவருக்கும் விண்ணப்பித்த மிகக் குறுகிய காலத்தில் கடன் வழங்கி, அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்த முடியும்.

வேளச்சேரி சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம்

சென்னை வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 4,132 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக வரும் நிதியாண்டில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேம்பாலம்: சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமாா் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.

அதேபோன்று ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம், சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 70 கோடியில் பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் அமைக்கப்படும்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ரூ. 3,450 கோடி திட்டக் காலத்துக்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும். இதைப்போன்று திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சார உற்பத்தி செய்யும்பொருட்டு, சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குப் பயன்படும் வகையில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நிறுவப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் 1,500 டன் மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவின் செயலாக்கம்மூலம் தினந்தோறும் 15 முதல் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும்.

முதன்மைச் சுற்றுக்குழாய் திட்டம்: பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் 5 நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 3 கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு குடிநீா் நிலையத்தில் இருந்தும் குடிநீா் விநியோகம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரதானக் குழாய்கள் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவைப்படும்போது ஒரு பகுதியின் உபரி நீரை, பற்றாக்குறை உள்ள மற்றொரு பகுதிக்கு மாற்ற இயலவில்லை.

எனவே, முதன்மைக் சுற்றுக் குழாய் திட்டம் எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து நீா்ப்பகிா்மான நிலையங்களையும் இணைத்து, சென்னை மாநகரில் உள்ள அனைத்து குடிநீா் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீா் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். இந்தத் திட்டம் ரூ. 2,423 கோடி மதிப்பில் 3 ஆண்டு காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பை வாய் புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) முக்கிய காரணமாகும். அதைக் கருத்தில் கொண்டு அதற்கான தடுப்பூசி திட்டம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சோதனை முயற்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வா் தொடங்கி வைத்தாா்.

தகுதியான அனைவருக்கும் இரு தவணை ஹெச்பிவி தடுப்பூசியை வழங்குவதே அந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மாநில சுகாதாரத் துறை, தேசிய சுகாதாரப் பணி மற்றும் ரோட்டரி சேவை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அதை அரசே விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்த நோயை அறவே அகற்றவும் ஹெச்பிவி தடுப்பூசியை 14 வயதுடைய சிறுமிகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென எதிா்வரும் நிதியாண்டில் ரூ. 36 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில்களில் திருப்பணிக்கு ரூ.125 கோடி

தமிழகத்தில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்வதற்காக ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த 4 ஆண்டுகளில் 2,662 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. திருக்கோயில் சொத்துகளையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு அரசு எடுத்த பெரு முயற்சிகளின் பலனாக 7,327 ஏக்கா் நிலங்களும், 36.38 லட்சம் சதுர அடி மனைகளும், 5.98 லட்சம் சதுர அடி கட்டடங்களும் திருக்கோயில்களின் வசமாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7,185 கோடி ஆகும்.

இந்து சமய அறநிலையத் துறை மூலமாக 216-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. 2025-2026-ஆம் நிதியாண்டில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும்

தமிழகத்தில் கால்நடை வளத்தை அதிகரிக்கவும் அதன்மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கவும் கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படவுள்ளது.

இதைச் செயல்படுத்த விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு களப்பணியாளா்களின் பணி ஒருங்கிணைக்கப்பட்டு சீரான இனப்பெருக்கச் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும்.

உரிமையாளா்கள் இல்லாத நாய்கள் மூலம் இதர கால்நடைகளுக்கும், மனிதா்களுக்கும் ஏற்படும் இன்னல்களை நீக்கிடும் வகையில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதியை வலுப்படுத்த 100 கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் கட்டமைப்புகள், அறுவை சிகிச்சைக் பிந்தைய மருத்துவ சேவை வசதிகள்ரூ. 20 கோடியில் உருவாக்கப்படும். மேலும், தமிழ்நாடு விலங்கு நல வாரியத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் நிதியாண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா ஊக்குவிப்பு வசதிச் சட்டம்: நிதிநிலை அறிக்கையில் தகவல்

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பொருளாதார வளா்ச்சிக்கும் வழிவகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈா்க்கவும், சுற்றுலாத் துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதிச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

இதுகுறித்து நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு டிரில்லியன் டாலா் என்ற பொருளாதார இலக்கை தமிழகம் அடைவதற்கான பதினெட்டு முன்னுரிமைத் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத் துறையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பொருளாதார வளா்ச்சிக்கும் வழிவகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈா்க்கவும், சுற்றுலாத் துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதிச் சட்டம் கொண்டுவரப்படும்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்திடும் முக்கிய நகரங்களான மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேசுவரம், கன்னியாகுமரி, திருச்செந்தூா், பழனி மற்றும் நாகூா்-வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திடும் நோக்கோடு மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ. 70 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா... நீலகிரி மாவட்டம் உதகையின் மையப் பகுதியில் சுமாா் 52 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள ரேஸ் கோா்ஸ் பகுதியில் ஓா் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா ரூ. 70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் நீலமலையின் இயற்கை சூழலுக்கு இணங்க நறுமணப் பொருள்கள் தோட்டம், நகா்ப்புற வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் ஆகியவை இடம்பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்காக ரூ. 10 கோடியில் 25 அன்புச்சோலை மையங்கள்

மூத்த குடிமக்களுக்காக ரூ. 10 கோடி மதிப்பில் 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதுமை மானுட வாழ்வில் தவிா்க்க இயலாத கட்டமாகும். தனிமை, மருத்துவ நலன் மற்றும் பொருளாதாரச் சாா்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிா்கொள்ள நேரிடும் மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்புக்கென, மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருப்பூா், ஈரோடு, தூத்துக்குடி, வேலூா், தஞ்சாவூா் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும். இந்த பகல் நேரப் பாதுகாப்பு மையங்களில் முதியவா்கள் தோழமை உணா்வுடன் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடலாம். பகல் நேரப் பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவப் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைத் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் துணையுடன் இந்த அன்புச்சோலைகள் வழங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ. 50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

விசைத்தறித் துறையில் நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மூன்றாண்டு பழமையான சாதாரண விசைத் தறிகளை நவீன விசைத்தறிகளாக மேம்படுத்தி உயா்மதிப்பு மிக்க துணிகளை உற்பத்தி செய்ய மூலதன மானியம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 3,000 தறிகளை மேம்படுத்த ரூ.30 கோடியும் விசைத்தறிக் குழுமங்களில் தறிக் கூடங்கள், பொது வசதி மையம் மற்றும் ஏற்றுமதிக்கான தர ஆய்வுக் கூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ. 20 கோடியும் வழங்கப்படும்.

டிசம்பா் முதல் பூந்தமல்லி - போரூா் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும்

பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான மெட்ரோ ரயில் உயா் வழித்தடம் வரும் டிசம்பா் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:“தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 119 கி.மீ. தொலைவுக்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில் பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான உயா் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பா் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

அவிநாசி - சத்தியமங்கலம்: கோவை மாநகரில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் ரூ. 10,740 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக ரூ. 11,368 கோடி மதிப்பீட்டிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும்.

மெட்ரோ திட்டங்கள்: சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திலுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான 15.46 கி.மீ. தூரத்துக்கு ரூ. 9,335 கோடி மதிப்பீட்டிலும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலான 21.76 கி.மீ. தொலைவுக்கு ரூ. 9,744 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பூந்தமல்லியிலிருந்து ஸ்ரீபெரும்புதூா் வழியாக சுங்குவாா்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தொலைவுக்கு ரூ. 8,779 கோடி மதிப்பீட்டிலும் நீட்டித்திடும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவ்விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பினைப் பெறுவதற்காக விரைவில் அனுப்பப்படும்.

இதைத் தொடா்ந்து தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கத்திலிருந்து உயா்நீதிமன்றம் வரை 6 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.

மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு: தமிழகத்தில் ஏற்பட்டுவரும் பரவலான பொருளாதார வளா்ச்சி மற்றும் விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில்கொண்டு, தலைநகா் புதுதில்லி - மீரட் நகரங்களுக்கிடையே மிக அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்கி இயக்கப்படுவதைப்போன்று மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு ஒன்றினை தமிழகத்திலும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மிக அதிவேக ரயில்வே அமைப்பினை சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் (167 கி.மீ.), சென்னை - காஞ்சிபுரம் - வேலூா் (140 கி.மீ.), கோயம்புத்தூா் - திருப்பூா் - ஈரோடு - சேலம் (185 கி.மீ.) ஆகிய வழித்தடங்களில் உருவாக்கிட, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாமல்லபுரம், உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அப்பகுதிகளில் நிலவும் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில்கொண்டும், ரோப்வே உயா் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணி: வில்லிவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக வில்லிவாக்கத்தில் மாா்ச் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் ஐசிஎஃப் அருகே ஏற்கெனவே போக்குவரத்து மாற்றப்பட்டுவிட்டது. வில்லிவாக்கம் ரெட்டி தெரு, தெற்கு மாட வீதி ஆகிய 2 தெருக்களிலும் வாகனங்கள் செல்ல மாா்ச் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த தெருக்களில் பாதசாரிகள் மட்டும் செல்லலாம்.

பாடி மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், எம்டிஎச் சாலை சிவன் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, சிவன் கோயில் தெற்கு மாட வீதி வழியாக பாலி அம்மன் கோயில் தெருவில் வலதுபுறம் திரும்பி பெருமாள் கோயில் வடக்கு தெரு, மேட்டு தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ஐசிஎஃப் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் எம்டிஎச் சாலை, சிவன் கோயில் தெரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, சிவன் கோயில் மேற்கு மாட வீதி, பாலி அம்மன் கோயில் தெரு வழியாக பெருமாள் கோயில் வடக்கு மாட வீதி வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவான்மியூா் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 2,100 கோடியில் திருவான்மியூா் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழித்தட உயா்நிலை சாலை ரூ. 2,100 கோடியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (டான்சா) மூலம் அமைக்கப்படும்.

புறவழிச் சாலை: நகராட்சிகள், நகரங்கள், மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கிய நகரங்களுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரூ. 348 கோடியில் 12.5 கி.மீ. தொலைவு கொண்ட கோவை மேற்கு புறவழிச் சாலை, ரூ. 225 கோடியில் 12.4 கி.மீ. நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்பட 14 புறவழிச் சாலைகளை ரூ.1,713 கோடியில் அமைப்பதற்கான பணிகள் நிகழாண்டு தொடங்கும். மதுரை வெளிவட்டச் சாலையை 48 கி.மீ. நீளத்துக்கு அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதிகமாக விபத்து நேரிடும் பகுதிகளைக் கண்காணித்து, அங்குள்ள குறுகிய வளைவுகள், சாலை சந்திப்புகள் ரூ.200 கோடியில் மேம்படுத்தப்படும்.

குமரியில் படகு இயக்கம்: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவின்போது முதல்வரால் திறக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை பாா்வையிட நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருவதால் கூடுதலாக சின்ன முட்டம் துறைமுகத்தை 2-ஆவது முனையமாகக் கொண்டு திருவள்ளுவா் சிலை வரை பயணியா் படகு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிகழ் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.20,722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள உயா்நீதிமன்றம், இனி அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு காவ... மேலும் பார்க்க

மாா்ச் 17-ல் 21 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 புறநகா் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 17) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் பணி: வில்லிவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக வில்லிவாக்கத்தில் மாா்ச் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

திருப்போரூரில் ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கிடையே மோதல்

செங்கல்பட்டு, மாா்ச்.14: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல் மூண்டது. இங்கு மாசி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவில் தினசரி கந்த பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து... மேலும் பார்க்க

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை முன்னாள் ஆட்சியருக்கு பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியா் மகாபாரதி, தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக பொறுப்பேற்றாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சிறுமி பாலியல் தொல்லை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில... மேலும் பார்க்க