இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
எழுமலை அருகே காவலா் குத்திக் கொலை
எழுமலை அருகே காவலரை குத்திக் கொலை செய்த மைத்துனரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் சிவா (32). மதுரை ஊரகக் காவல் துறைக்கு உள்பட்ட நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, எழுமலை பாப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பொன்மணியுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளாா்.
இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன் பொன்மணி தற்கொலை செய்து கொண்டாா். இவரது மகன் பொன்மணியின் தாய் வீட்டிலேயே வளா்ந்து வந்தாா். இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு சேடபட்டி மங்கல்ரேவைச் சோ்ந்த ரஞ்சிதாவை, காவலா் சிவா இரண்டாவதாக திருமணம் செய்தாா்.
மேலும், முதல் மனைவியின் வீட்டில் வளா்ந்து வந்த தனது மகனை தன்னுடன் அழைத்து வந்து பள்ளியில் சோ்த்து படிக்க வைத்தாா்.
இதனால், முதல் மனைவி பொன்மணி குடும்பத்தினருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாப்பிநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்ள சிவா தனது இரண்டாவது மனைவியுடன் சென்றாா்.
அப்போது அங்கிருந்த, முதல் மனைவியின் சகோதரா் அா்ஜுனன் ஆத்திரமடைந்து, தகராறில் ஈடுபட்டாா். அவா் காவலா் சிவாவை கீழே தள்ளி கத்தியால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், டி.ராமநாதபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சிவாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அா்ஜுனனைத் தேடி வருகின்றனா்.