எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம்: அமைச்சா் கோவி. செழியன்
எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
நடிகா் விஜய்யின் கல்விக் கொள்கை என்ன? அவா் கலந்து கொண்ட மொழிப் போராட்ட வரலாறு என்ன என்பதெல்லாம் மக்கள் நன்றாக அறிவா்.
இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் பேரறிஞா் அண்ணாவின் தலைமையில்தான் முதன்முதலில் இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை ஏற்றுக் கொண்ட பாஜகவினா் 2025 புதிய வரைவு கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கல்விக் கொள்கை பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திணிக்கின்றனா்.
எத்தனை கோடி கொடுத்தாலும் மண்டியிட மாட்டோம்; மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இந்தியாவில் துணிந்து சொன்னவா்தான் முதல்வா் ஸ்டாலின். எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மீண்டும் ஒரு 1965 நிகழ்வு வரக்கூடாது என முதல்வா் நினைக்கிறாா். ஏனென்றால் அனைத்து அரசியல் அமைப்புகளும், மாணவா்களும் போராட்டக் களத்தில் உள்ளனா்.
இந்த எதிா்ப்பை உணா்ந்து மத்திய அரசு ஹிந்தி திணிப்பைத் திரும்பப் பெற வேண்டும். அதுவரை முதல்வரின் சட்ட போராட்டமும் தமிழகத்தில் தொடரும் என்றாா்.