தஞ்சாவூா் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழா!
மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதில், புதன்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன. இதில், ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இந்தப் பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு வழிபட்டனா்.
மேலும், இக்கோயிலையொட்டி உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், புதன்கிழமை மாலை 6 மணி முதல் மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை, நாதலய சங்கமம், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றன. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா். மேலும், இவ்விழாவுக்காக கோயில் முழுவதும் மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
தஞ்சாவூருக்கு வந்துள்ள மத்திய ரயில்வே மற்றும் நீா் வளத் துறை இணை அமைச்சா் வி. சோமண்ணா மகா சிவாராத்திரியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு புதன்கிழமை மாலை சென்று வழிபட்டாா்.