ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்
நமது சிறப்பு நிருபர்
நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஐ) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் திட்டத்திற்கு ரூ.15,000 கோடி என ஆரம்ப மதிப்பீடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு: நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறைச் சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கும் உந்துதல் அளிக்கும் வகையில், மேம்பட்ட நடுத்தர போர் விமான (ஏஎம்சிஏ) தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாதிரிக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். வான்வழிப் பயண மேம்பாட்டு முகமை (ஏடிஏ), தொழில்துறை நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் "செயல்படுத்தல் மாதிரி' அணுகுமுறையில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கிடையே போட்டி அடிப்படையில் சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் முன்மாதிரித் திட்டமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தொழில்துறை நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டு முயற்சியாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ ஏல நடைமுறைகளில் பங்கேற்க முடியும்.
இது தற்சார்பு திட்டம் என்பதால் இந்த ஏல நடைமுறைகளில் நிறுவனமோ அல்லது ஏலதாரர் நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப ஓர் இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
விண்வெளித் துறையில் தற்சார்பு நிலையை அடையும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாக இத்திட்டம் ஒரு மைல் கல்லாக இருக்கும். அந்த வகையில் மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானங்களின் முன்மாதிரியை உருவாக்குவதற்கான உள்நாட்டு நிபுணத்துவம், திறன் மற்றும் வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான முக்கியப் படியாக இது இருக்கும்.
இந்திய விமானப்படை, நீண்ட காலமாக இந்த திட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கடந்த ஆண்டு இந்தப் போர் விமானத் திட்டத்திற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப மேம்பாட்டுச் செலவு சுமார் ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட நடுத்தர போர் விமான அபிவிருத்தி பணிக்கான ஆர்வமுள்ளவர்களை கண்டறிவதற்கான விவரங்களை வான்வழி பயண மேம்பாட்டு முகமை விரைவில் வெளியிடும். இந்தியா, ஏற்கனவே இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் உருவாக்கி வெற்றி கண்டதில் ஏஎம்சிஏ உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை பெற்றுள்ளது.