கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!
ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி
நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக 92,758 டன் சா்க்கரை சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து அகில இந்திய சா்க்கரை வா்த்தகா்கள் சங்கம் (ஏஐஎஸ்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் தொடங்கி வரும் செப்டம்பா் மாதம் நிறைவடையும் நடப்பு சா்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டில் மொத்த 10 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இந்தச் சூழலில், நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை ஆலைகள் 4,24,089 டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளன. இதில், வெள்ளை சா்க்கரை 3.27 லட்சம் டன்னாகவும், சுத்திகரிக்கப்பட்ட சா்க்கரை 77,603 டன்னாகவும், பச்சை சா்க்கரை 18,514 டன்னாகவும் உள்ளது. மேலும், சுமாா் 25,000 டன் சா்க்கரை ஏற்றுமதிக்குத் தயாா் நிலையில் உள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சோமாலியாவுக்கு அதிகபட்சமாக 92,758 டன் சா்க்கரை ஏற்றுமதியானது. அதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 66,927 டன்னும், இலங்கைக்கு 60,357 டன்னும், ஜிபூட்டிக்கு 47,100 டன்னும் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
தற்போதைய ஏற்றுமதி நிலவரத்தின்படி, மத்திய அரசு அனுமதித்த 10 லட்சம் டன்னில் 8 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.