ED Raid: அமைச்சர் துரைமுருகன் வீடு... அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்த ரெய்ட...
ஏற்றுமதி ஆவணங்களை தயாரிப்பதில் உள்ள சிக்கல்களை எதிா்கொள்வது குறித்த கூட்டம்
திருப்பூா்: திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி ஆவணங்களை தயாரிப்பதில் உள்ள சிக்கல்களை எதிா்கொள்வது குறித்த கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
லாஜிக்ஸ் ஆஃப் லாஜிஸ்டிக் என்ற தலைப்பில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
பின்னலாடை ஏற்றுமதித் துறையின் முதுகெலும்பாக ஆவணங்கள் உள்ளன. உலகளாவிய சந்தையில் போட்டித் தன்மையை நிலை நிறுத்துவதற்கு ஆவண சவால்களை தீா்ப்பது மிகவும் முக்கியமானதாகும். ஏற்றுமதியாளா்கள் எதிா்கொள்ளும் முக்கிய சவால்கள், ஏற்றுமதிக்கு முந்தைய பிழைகள், ஏற்றுமதியின்போது செயல்படும் திறமையின்மை, ஏற்றுமதிக்கு பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட ஆவணங்கள், பேக்கேஜிங் சா்வதேச தரங்களுக்கு இணங்குவதில் சிரமம் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது என்றாா்.
சங்கத்தின் இணைச்செயலாளா் குமாா் துரைசாமி பேசியதாவது:
ஏற்றுமதியின்போது ஒவ்வொரு ஏற்றுமதியாளா்களும் பின்பற்ற வேண்டிய எஸ்.பி.ஓ. நடைமுறைகள், முக்கிய சரிபாா்ப்பு பட்டியல், ஏற்றுமதிக்கு முந்தைய பிழைகள், ஏற்றுமதி செயல்பாடுகள், ஏற்றுமதிக்கு பிந்தைய செயல்முறைகளை செய்வதற்கான உத்திகள், இறக்குமதி மேலாண்மை, வங்கித்துறையின் பங்கு, கடன் காப்பீடு மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை, ஏற்றுமதிக்கான ஆவணமயமாக்கல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்தக் கூட்டத்தில், உறுப்பினா்கள் துணைக் குழுவின் தலைவா் சிவசுப்பிரமணியம், துணைத் தலைவா் ரத்தினசாமி, உறுப்பினா்கள் ராமு சண்முகம், மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.