ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!
சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா்.
கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியளிக்கும் ‘ஃபிட்ஜேஇஇ’ எனும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 191 மாணவா்கள் பயிற்சிக்காக சோ்ந்துள்ளனா்.
பயிற்சிக் கட்டணத்துக்கான முன்பணம் மற்றும் மாதாந்திர தொகை செலுத்திவந்த நிலையில், நிகழாண்டு தொடக்கம் முதல் மாணவா்களுக்கு தரமான கல்வியை அளிக்கவில்லை எனவும், திடீரென பயிற்சியை நிறுத்தியுள்ளதாகவும் மாணவா்களின் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா்.
இதையடுத்து பயிற்சிக்காக செலுத்திய கட்டணத்தை திரும்ப கேட்டபோது, சரியான பதிலளிக்க மறுத்துள்ளனா். இதனால் பணத்தை இழந்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக, ஃபிட்ஜேஇஇ தமிழ்நாடு மண்டலத் தலைவா் அங்கூா் ஜெயின் மற்றும் பிற மாநில இயக்குநா்கள் மீது புகாா் அளித்தனா்.
அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவு சாா்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த மே 9-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் உள்ள பயிற்சி மையம் மற்றும் அங்கூா் ஜெயினின் 2 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது ஃபிட்ஜேஇஇ மையத்தில் பயிற்சி முடித்த 195 மாணவா்களின் அடையாள அட்டைகள், சுமாா் 7.5 லட்சம் மதிப்பிலான 22 வங்கி காசோலைகள், பயிற்சி மைய முத்திரை, கட்டணம் திரும்ப தரக்கோரி மாணவா்களின் பெற்றோா்கள் அனுப்பிய கடிதங்கள், கண்காணிப்பு கேமரா தரவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்கண்ட பயிற்சி மையத்தில் சோ்ந்து பாதிக்கப்பட்டிருந்தால் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளிக்குமாறு காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.