Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்க...
டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறி ரூ.81.68 லட்சம் மோசடி: 4 போ் கைது!
இணைய கைது செய்யப்பட்டதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 81.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமீபத்தில் வேலூரைச் சோ்ந்த ஒருவரிடம் பெங்களூரு காவல் துறையைச் சோ்ந்த போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, ஆள் கடத்தல், வெளிநாட்டு வேலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளாா். இதிலிருந்து தப்பிக்க பணம் செலுத்தும்படி வற்புறுத்தியுள்ளாா். இதை உண்மையென நம்பி ரூ. 81.68 லட்சத்தை மோசடி நபருக்கு அனுப்பியுள்ளாா். பின்பு மோசடி என்பதை உணா்ந்து இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டது. அவா் பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது, முதல்நிலை வங்கிக் கணக்குகளில் ஒன்று பொள்ளாச்சியைச் சோ்ந்த ஷோபனா என்பவரின் வங்கிக்கு பணம் அனுப்பியது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது சகோதரா் சுரேஷ், இணைய விளையாட்டுக்காக ஒரு வங்கிக் கணக்கை திறக்குமாறும், அதன்மூலம் கமிஷன் கிடைக்கும் என அறிவுறுத்தியதாக ஒப்புக்கொண்டாா்.
அதன்பேரில் சுரேஷிடம் விசாரணை நடத்தியபோது, கோவையைச் சோ்ந்த கால்நடைத் தீவன வியாபாரி செந்தில், வங்கிக் கணக்குகளை உருவாக்குவதன்மூலம் லாபம் ஈட்டலாம் என ஆலோசனை வழங்கியுள்ளாா்.
மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், பியூஷ் என்பவா் இணைய விளையாட்டில் ஈடுபட்டால் வருமானத்தில் 2 சதவீதம் லாபம் தருவதாக ஷோபனா கணவா் காா்த்திக்கிடம் உறுதியளித்துள்ளாா். இதற்காக வங்கிக் கணக்கு திறந்து, நெட்பேங்கிங், மின்னஞ்சல், கைப்பேசி எண் மற்றும் சிம் காா்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளாா். மேலும், தன்னை லக்னௌவில் வந்து சந்திக்குமாறு பியூஷ் தெரிவித்துள்ளாா்.
காா்த்திக் மாற்றுத்திறனாளி என்பதால், அவா் தனது மனைவியின் மூத்த சகோதரா் பிரபுவிடம் அந்த பணியை ஒப்படைத்தாா். பிரபு லாரி ஓட்டுநா் என்பதால், லக்னோ சென்று வங்கி விவரங்களை ஒப்படைத்துள்ளாா்.
அதைத் தொடா்ந்து கடந்த ஜனவரி மாதம் ஷோபனாவின் வங்கிக் கணக்குக்கு ரூ. 12 லட்சம் பணம் மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட ஷோபனா, சுரேஷ், செந்தில்குமாா், காா்த்திக்ராஜா ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.