ஐபிஎல்: சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்! ரசிகர்கள் கவனிக்க..!
ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கான போட்டிகள் மார்ச் 28, ஏப்ரல் 5, 11, 25, 30 மற்றும் மே மாதம் 12 ஆகிய நாள்களில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் 11 மணி வரை வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பறக்கும் ரயில், உள்ளூர் ரயில் அல்லது மெட்ரோ ரயில் மூலமாக சேப்பாக்கம் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் மைதானம் இருக்கும் 200 மீட்டர் தொலைவில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனுமதி இல்லாத வாகனங்களில் வருபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் ஆர்.கே. சாலை வழியாக காமராஜர் சாலை சென்று மெரீனா கடற்கரை சாலையை அடைந்து சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

