ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது புதிய ரோபா நாய் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ரோபோ நாய்
இந்த நாய் ரோபோ, வீரர்கள் செய்யும் சைகைகளை செய்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது மட்டுமின்றி, அவர்கள் எதிர்பாராத அசைவுகளையும் செய்து ஆச்சரியப்படுத்துகிறது.
கிரிக்கெட் திடல் முழுவதும் வலம் வரும் இந்த இயந்திர நாயின் முகத்திலும் முதுகிலும் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், வீரர்களின் செயல்பாடுகள் நாயின் பார்வையிலும் விடியோ பதிவு செய்யப்படுகிறது. வீரர்கள் பேசிக்கொண்டும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் இயந்திர நாய், அதனையும் படம் பிடிக்கிறது.
இந்த நாய்க்கு சார்ஜ் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. தானகவே சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இந்த ரோபோ நாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நாய்க்கு வடிவிலான இயந்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் ஐபிஎல் கேட்ட நிலையில், இந்த நாய்க்கு சம்பக் எனப் பெயரிட ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த நிலையில், இதுதொடர்பாக சம்பக் என்ற குழந்தைகளுக்கான 9 மொழிகளில் செயல்பட்டுவரும் இதழ் வெளியிட்டு நிறுவனம் பிசிசிஐ மீது காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழக்குரைஞர் ஜேசாய் தீபக் கூறும்போது, “சாம்பக் என்ற பெயருக்கும் குழந்தைகள் பத்திரிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கு பதிலாக, பிரபல தொலைக்காட்சி தொடரான ‘தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மாவில் வரும் கதாபாத்திரமான சம்பக் லால் பெயர் ரோபோ நாய்க்கு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உயர் நீதிமன்ற நீதிபதி, “இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு 'சீக்கு' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதற்கு குழந்தைகள் இதழ் நிறுவனம் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த இதழில் சீக்கு என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்