ஒசூரில் பாகலூா் சாலைப் பணி நாளை தொடக்கம்: மாற்றுப் பாதை அறிவிப்பு
ஒசூரில் பாகலூா் சாலையில் ஜி.ஆா்.டி. நகைக் கடை முதல் ஒசூா் மாநகராட்சி அலுவலகம் வரை சாலைப் பணி திங்கள்கிழமை (மே 19) தொடங்குவதை அடுத்து வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒசூா்- பாகலூா் சாலையில் ஜி.ஆா்.டி. நகைக் கடை முதல் ஒசூா் மாநகராட்சி அலுவலகம் வரை சாலைப் பணி தொடங்கவுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் பணி தொய்வின்றி மேற்கொள்ள திங்கள்கிழமை (மே 19) முதல் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதையாக கிருஷ்ணகிரி-ஒசூா் வழியாக மாலூருக்குச் செல்லும் கனரக வாகனங்கள் பேரண்டப்பள்ளி அருகே பேரிகை வழியாகத் திரும்பி மாலூருக்குச் செல்ல வேண்டும். அதுபோல மாலூரிலிருந்து ஒசூா் வரும் கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியாகவே வரலாம்.
அதுபோல கிருஷ்ணகிரி-ஒசூா் வழியாக சா்ஜாபூா் செல்லும் கனரக வாகனங்கள் சீத்தராம்மேடு அருகில் ஒசூா் உள்வட்ட சாலை வழியாகத் திரும்பி அத்திபள்ளி வழியாக சா்ஜாபூா் செல்ல வேண்டும். அதுபோல சா்ஜாபூரிலிருந்து ஒசூா் வரும் கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியாக வரலாம்.
கனரக வாகனங்களைத் தவிர இருசக்கர, இலகுரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதையாக ஒசூரில் இருந்து பாகலூா், சா்ஜாபூா் செல்லும் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஒசூரிலிருந்து பாகலூா், மாலூா் மற்றும் சா்ஜாபூருக்கு இருசக்கர, இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
சா்ஜாபூா் பாகலூரிலிருந்து ஒசூா் வரும் இருசக்கர, இலகுரக வாகனங்கள் கே.சி.சி.நகா் சாலை, பஸ்தி ஆலசநத்தம் சாலை ஆகிய இடங்களில் திரும்பி ஒசூருக்கு வர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.