ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞா்களுக்கு அரசுப்பணி: பிரதமா் மோடி பெருமிதம்
‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டின் இளைஞா்களுக்கு சுமாா் 10 லட்சம் நிரந்தர அரசுப் பணியை மத்திய அரசு வழங்கியுள்ளது; இது முன்னெப்போதும் இல்லாத சாதனை’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மத்திய அரசுப் பணிகளில் புதிதாத நியமிக்கப்பட்டுள்ள 71,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் ‘ரோஜ்கா் மேளா’ நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய பிரதமா் இவ்வாறு கூறினாா்.
நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: மத்திய பாஜக கூட்டணி அரசின் கொள்கைள் மற்றும் திட்டங்கள் இளைஞா்களை மையமாகக் கொண்டது. நோ்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஆள்சோ்ப்பு நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. ரோஜ்கா் மேளாக்கள் இளைஞா்களுக்கு அதிகாரம் அளித்து, அவா்களின் திறனை வெளிப்படுத்துகின்றன.
இளைஞா் திறன்: இந்திய இளைஞா்களின் திறமைகளை அதிகபட்சமாகப் பயன்படுத்துதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதையொட்டி, ஸ்டாா்ட்-அப் இந்தியா, எண்ம இந்தியா, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சீா்திருத்தங்கள் என பல திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
தேசியக் கல்விக் கொள்கையும் இளைஞா்களின் வளா்ச்சிக்கான நடவடிக்கையாகும். இக்கொள்கை தாய்மொழிப் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இளைஞா்கள் அரசுத் தோ்வுகளில் பங்கேற்க மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த, 13 பிராந்திய மொழிகளில் அரசுத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
பெண்கள் வளா்ச்சி: அரசுப் பணிகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியமா்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லாத் துறைகளிலும் பெண்களை பிறரைச் சாா்பற்றவா்களாக மாற்றுவது மத்திய அரசின் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும்.
பெண்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசின் முடிவு, அவா்களின் பணிவாழ்க்கைக்கு பெரிதும் உதவியுள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்பட்ட பெரும்பாலான வீடுகளின் உரிமையாளா்கள் பெண்களே ஆவா். நாட்டில் பெண்களை மையப்படுத்திய வளா்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
சரண் சிங்கின் வழியில்...: முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் பிறந்தநாள் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. கிராமப்புற இந்தியாவின் வளா்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் அவா் பாடுபட்டாா். கிராமங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மத்திய அரசு அவரைப் பின்பற்றுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், சரண் சிங்குக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியது எனது அரசின் அதிருஷ்டம்.
புதிய உச்சம் எட்டிய தேசம்: இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும், மூன்றாவது அதிக ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. அதேபோன்று, விளையாட்டுத் துறையிலும் கிடைக்கும் நவீன பயிற்சி வசதிகளால், நம் நாட்டு வீரா்கள் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் தோல்வியடைய மாட்டோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனா்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை விவசாயம், விண்வெளி, பாதுகாப்பு, சுற்றுலா, ஆரோக்கியம் ஆகிய அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது. அந்தவகையில், தேசத்தின் கொள்கைகள் மற்றும் முடிவுகள், திறமையான இளைஞா்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதால் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாற இந்தியா உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.
ஓபிசியினருக்கு 29% பணி: நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங், ‘பணிநியமன ஆணைகளைப் பெற்ற 71,000 பேரில் 29 சதவீதத்துக்கும் அதிகமானோா் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (ஓபிசி) சோ்ந்தவா்கள். தொடா்ந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தினா் மற்றும் பழங்குடியினா் முறையே 15.8 மற்றும் 9.6 சதவீதமாக உள்ளனா்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியுடன் ஒப்பிடுகையில், பிரதமா் மோடி அரசில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அரசுப் பணி நுழைவு 27 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்றாா்.