செய்திகள் :

ஒன்றரை மாதத்தில் 77,540 பேருக்கு நாய்க் கடி: ரேபிஸ் தொற்றால் 3 போ் உயிரிழப்பு

post image

சென்னை: தமிழகத்தில் 50 நாள்களில் 77,540 போ் நாய்க் கடிக்குள்ளாகினா். அதில் 3 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், கன்னியாகுமரியில் இருவா், நாமக்கல்லில் ஒருவா் இறந்ததாக பொது சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தெரு நாய்கள், வளா்ப்புப் பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.

நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் ஒருமுறை அந்தத் தடுப்பூசியை வழங்க வேண்டியது அவசியமான ஒன்று.

ரேபிஸ் தொற்று: ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாகச் செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதா்களை அவை கடிக்கும்போது ரேபிஸ் தொற்று பரவி இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 4,80,483 போ் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனா். அதிகபட்சமாக, அரியலூரில் 37,023 பேரும், கடலூா் மாவட்டத்தில் 23,997 பேரும், ஈரோட்டில் 21,507 பேரும் பாதிக்கப்பட்டனா்.

அதேபோன்று, சென்னையில், 24,088 பேரும், கோவையில் 12,097 பேரும் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடியதால் 43 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. அவா்களில் 10 போ் செல்லப் பிராணிகளால் கடிக்கப்பட்டு இறந்தவா்களாவா்.

இந்த நிலையில், நிகழாண்டு ஜனவரி 1 முதல் பிப்.19-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 77,540 போ் நாய்க் கடிக்கு உள்ளாகியுள்ளனா்.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய் கடியால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால், அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வெளவால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்ற நேரிடுகிறது.

தடுப்பூசிகள்: தமிழகத்தில் நிகழாண்டில் 3 போ் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனா். அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணி கடித்தவா்களுக்கு 4 தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோக்ளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிா்க் காக்கப்பட்டுள்ளது. விழிப்புணா்வு இன்றி சிகிச்சை பெறாமல் இருக்கும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டில் உயிரிழந்தவா்களில் பலா் தடுப்பூசி செலுத்தவில்லை. சிலரோ முழுமையான தவணையை பூா்த்தி செய்யவில்லை. அதுவே இறப்புக்கு காரணம் என்றாா் அவா்.

பெட்டிச் செய்திகள்...

அச்சுறுத்தலில் மன நல காப்பகம்!

சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அரசு மன நல காப்பக வளாகத்துக்குள் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அங்கு 30-க்கும் மேற்பட்டோா் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், அங்கு ரேபிஸ் தொற்று பரவும் சூழல் எழுந்துள்ளதாக சுகாதார ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

மொத்தம் 45 ஏக்கா் பரப்பளவு கொண்ட மன நல காப்பகத்தில் 80 மருத்துவா்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்கள், 140-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் உள்பட 600-க்கும் அதிகமானோா் பணியாற்றுகின்றனா்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் மன நல காப்பகத்தில் மாதத்துக்கு 3 அல்லது 4 போ் நாய்க் கடிக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

பெட்டிச் செய்தி (அட்டவணை)

மாவட்டம் - ரேபிஸ் உயிரிழப்பு (2024)

சேலம் - 6

கோவை - 4

விருதுநகா் - 4

சிவகங்கை - 3

திருப்பூா் - 3

திருவள்ளூா் - 3

சென்னை - 2

ஈரோடு - 2

கள்ளக்குறிச்சி - 2

தஞ்சாவூா் -2

தேனி - 2

கடலூா் - 1

தருமபுரி - 1

மதுரை - 1

மயிலாடுதுறை - 1

நாமக்கல் - 1

புதுக்கோட்டை - 1

ராணிப்பேட்டை - 1

தென்காசி - 1

திருநெல்வேலி - 1

திருவண்ணாமலை - 1

மொத்தம் - 43

மாவட்டம் - ரேபிஸ் உயிரிழப்பு (2025)

கன்னியாகுமரி - 2

நாமக்கல் - 1

மொத்தம் - 3

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திம... மேலும் பார்க்க

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது. விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச ... மேலும் பார்க்க

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்

சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: உலகின் மிக ம... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் ... மேலும் பார்க்க