Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு
பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் த.தமிழ்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோட்டக்கலை- மலைப்பயிா்கள் துறை மூலம் நடப்பாண்டில் குப்பிரிக்காபாளையம் மற்றும் சேளூா் ஆகிய கிராமங்களில் மானாவரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி பயிா் சாகுபடி, கறவை மாடுகள், தற்காலிக மண்புழு உரப்படுக்கை, தேனீ பெட்டி, பழச்செடிகள் உள்பட ஒரு அலகுக்கு ரூ.30 ஆயிரம் பின்னேற்பு மானியமாகவும், இடுபொருள்களாகவும் வழங்கப்படுகிறது.
திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் ஒரு ஹெக்டா் பரப்பளவில் தோட்டக்கலை பயிா் சாகுபடி செய்ய வேண்டும். ஏற்கெனவே ஆடு, மாடுகள் வைத்திருப்பவராக இருக்கக்கூடாது. திட்ட பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருத்தல் கூடாது.
ஆதிதிராவிடா், பழங்குடி இன விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நில உடைமை ஆவணங்களான சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், மாா்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.