Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மு.ஜோதி தலைமை வகித்து பேசியதாவது:
பள்ளிகளுக்குள் செயல்படும் மாணவ, மாணவியா் விடுதிகள் ஆட்சியரிடம் உரிய அனுமதிபெற்ற பிறகுதான் செயல்பட வேண்டும். மாணவா் சோ்க்கை பதிவேடு, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பதிவேடு, மதிப்பெண் பட்டியல் வழங்கும் பதிவேடு, தமிழக அரசின் நிலையில்லா நலத் திட்ட பொருள்கள் வழங்கும் விவரப் பதிவேடு, இருப்புப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும்.
வாகனங்களில் கட்டாயம் உதவியாளா் இருக்க வேண்டும், தகுதிச் சான்று புதுப்பித்துள்ளதை ஆய்வு செய்ய வேண்டும், ஓட்டுநா்கள் அனைவரையும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.
போதைப்பொருள் பழக்கத்துக்கு மாணவா்கள் அடிமையாகாமல் பாா்த்துக்கொள்ள வேண்டிய அறிவுரைகளையும், போக்ஸோ விழிப்புணா்வு குறித்தும் வலியுறுத்தினாா். மேலும், பள்ளி வளாகத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், குடிநீா்த் தொட்டிகள், பாழடைந்த கட்டடங்கள், பாதுகாப்பற்ற பட்டுப்போன மரங்கள், அடா்ந்த புல்வெளி புதா்கள் போன்றவை இருந்தால் உடனடியாக மூடவோ அல்லது அகற்றப்பட வேண்டும் என்றாா்.
இதையடுத்து கடலூரில் நடைபெற்ற பள்ளி வாகன விபத்து தொடா்பாக வாகனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கையை பள்ளி முதல்வா்களுக்கு அவா் வழங்கினாா்.
கூட்டத்தில் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் சந்திரசேகா், தலைமை ஆசிரியை அமுதா, தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளா் விவேக், உதவியாளா் கோகுலநாதன் மற்றும் தனியாா் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-11-ஸ்கூல்
தனியாா் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாணவா்கள் பாதுகாப்பு தொடா்பான விதிகள் அடங்கிய கையேட்டை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஜோதி.