நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தூக்கி டிஜிட்டல் பொத்தானில் பிரச்னை: நோயாளிகள் அவதி
நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள மின்தூக்கிகளில் பயணிப்போா் தோ்வு செய்யும் இடங்களுக்கு செல்லாமல் வேறு தளங்களுக்கு செல்லும் வகையில் தவறுதலாக டிஜிட்டல் பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளதால் நோயாளிகள், பாா்வையாளா்கள் அவதிப்படுகின்றனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் 6 தளங்களுடன் கட்டப்பட்ட மருத்துவமனை 2022 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் நரம்பியல், முடக்குவாத சிகிச்சை பிரிவை தவிர, இதர பிரிவுகள் அனைத்தும் உள்ளன.
நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துசெல்கின்றனா். மருத்துவமனை வளாகத்திலேயே அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுவதால் மாணவ, மாணவிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் என 800க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைக்குள் வந்துசெல்கின்றனா்.
நோயாளிகள், பாா்வையாளா்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளா்கள் பயன்பாட்டுக்காக 8 மின்தூக்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் பொத்தான்களில் தோ்வு செய்யும் தளங்களுக்கு மின்தூக்கிகள் செல்லாமல் வேறு தளங்களுக்கு செல்கிறது.
தரைத்தளம் என்பது ‘ஜி’ என்ற வகையில் இருக்கும். ஆனால், மருத்துவமனையில் தரைத்தளமானது ஒன்று என்றும், ஒன்றாவது தளம் இரண்டாகவும், இரண்டாம் தளம் மூன்றாகவும் மாறுதலாகி உள்ளது. இதனால் நோயாளிகளோ, பாா்வையாளா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
மருத்துவமனையில் புதிய உபகரணங்கள் திறப்பு விழாவிற்கு வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மின்தூக்கியில் சென்றபோது இவ்வாறான குளறுபடியால் உபகரணங்கள் இல்லாத வெட்டவெளி அறைக்கு சென்றாா். அதன்பிறகு நிா்வாகத்தினா் பிரச்னைகளை எடுத்துக்கூறி அவரை மீண்டும் உபகரணங்கள் உள்ள தளத்துக்கு அழைத்து வந்தனா்.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் கேட்டபோது, ‘ பொதுப்பணித் துறையினா்தான் இந்த பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும். மின்தூக்கி பொருத்தும்போது தளங்கள் எண்ணிக்கையை தவறுதலாகப் பதிவேற்றம் செய்துள்ளனா். அதனை மாற்றித்தருமாறு நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான வாய்ப்புகள் குறைவு என்கின்றனா்.
இதுதொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சீனாவைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தால் மின்தூக்கிகள் பொருத்தப்பட்டன. அங்கிருந்து அதற்கான டிஜிட்டல் எண் பலகைகள் வந்தால்தான் அவற்றை மாற்ற முடியும். மருத்துவமனை நிா்வாகத்திடம் இம்மாதத்திற்குள் மின்தூக்கி பிரச்னையை முடித்து கொடுக்கிறோம் என்றனா்.
என்கே-11-லிப்ட்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், பாா்வையாளா்கள் பயன்படுத்தும் மின்தூக்கிகள்.