ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சட்டம் இயற்றும் ஆற்றலுக்கு மீறியது: காங்கிரஸ்
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.
இதையும் படிக்க : மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்!
காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி பேசியதாவது:
“ஏழாவது அட்டவணையை கடந்து அடிப்படை கோட்பாடுகள் உள்ளன. ஒருசில அரசியல் கோட்பாடுகள் அவையில் திருத்தங்களுக்கு மீறியதாகவும். நமது இறையாண்மை மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு என்பது மாற்றப்படக் கூடாது.
சட்டத்துறை அமைச்சர் கொண்டு வந்துள்ள மசோதாக்கள் சட்டம் இயற்றும் ஆற்றலுக்கு மீறியதாகும். நமது அரசியல் சாசனத்தில் மாநில காலகட்டத்தை எப்படி தேசிய அரசியலுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும். இது அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது.
இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலங்களின் சரிசமமான அதிகாரத்தை கொண்டுள்ளது. தேசிய அரசியலுடன் கொண்டு வர முடியாது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பாகும்.
ஆகையால், மத்திய அதிகாரம் என்பது அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது. வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது. இந்த அவையின் அதிகாரத்துக்கு மீறிய சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.